×

குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் காட்டுத் தீ அணைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

*ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்

ஊட்டி : குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் அணைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் சென்று பார்வையிட்டார். குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் கடந்த 12ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டு நான்காவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், பல ஏக்கர் பரப்பளவில் இருந்த செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில், இந்த காட்டு தீயை அணைக்கும்பணியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் குன்னூர் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நாள்தோறும் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியினை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், காட்டு தீயை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கெளதம் நிருபர்களிடம் கூறியதாவது:

குன்னூர், பாரஸ்டேல் பகுதியில் கடந்த 12ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பரவாமல் இருக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீ பரவலால் இதுவரை காட்டிலுள்ள விலங்குகளுக்கு எதுவும் பாதிக்கப்படவில்லை. விலங்குகள் அனைத்தும் அருகிலுள்ள காடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டது. நமது மாவட்டத்தைச் சேர்ந்த 50 தீயணைப்பு வீரர்களுடன், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில தீயணைப்பு வீரர்களின் தேவையையும் கேட்டுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் காட்டு தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் அருணா கூறுகையில்,“பாரஸ்டேல் பகுதியில் ஏற்பட்டுகள் காட்டு தீயை கட்டுப்படுத்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் மூலம் காட்டு தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். இந்த ஆய்வின்போது, ேகாவை வன அலுவலர் ஜெயராஜ், குன்னூர் வட்டாட்சியர் (பொ) ஜவஹர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் காட்டுத் தீ அணைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Barrasdale ,Coonoor ,Ooty ,District Collector ,Aruna ,fire ,Coonoor Barasdale ,Coonoor Parasdale ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு